திமுக - சிபிஎம் கோப்பு படம்
தமிழ்நாடு

முடிவுக்கு வந்த இழுபறி.. சிபிஎம்-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்!

நீண்ட இழுபறிக்குப் பிறகும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 மட்டுமே ஒதுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி இருக்கிறது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அக்கூட்டணியில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், சிபிஎம், விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. பெரிய கூட்டணியை அமைத்திருப்பதால் அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாது என தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையின் ஆரம்பகட்டத்திலேயே தெரிவித்துவிட்ட திமுக, அதன்படியே, ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிடக் குறைவான தொகுதிகளையே ஒதுக்கியது. எனினும் காங்கிரசின் வலிமையான பேரத்தால் 3 தொகுதிகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

பெ. சண்முகம்

இந்த சூழலில்தான், காங்கிரஸுக்கு அதிகமான தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, தங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பதில் நியாயமல்ல எனக் கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவை வலியுறுத்தி வந்தார். ஆனாலும், முதலில் இருந்தே திமுக 5 இடங்கள் என்ற அளவிலேயே இருந்து வருவதாக கூறப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், கடந்த தேர்தலைப் போலவே 6 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும் என முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தியதாக பெ.சண்முகம் அடுத்தடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிபிஎம் தொடர்ச்சியான மாநிலக் குழு மற்றும் மாநில செயற்குழுவைக் கூட்டி கூட்டணிக் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்தான், இன்று 5-வது கட்டமாக சிபிஎம் அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

திமுக - சிபிஎம்

இந்த சூழலில்தான், திமுக முதலில் இருந்தே கூறி வந்தே 5 தொகுதிகளே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பெ.சண்முகம் இடையே கையெழுத்தாகியிருக்கிறது.