முதல்வர் மு.க ஸ்டாலின் x
தமிழ்நாடு

திமுக அதிரடி.. தொகுதி பங்கீட்டில் புதிய பார்முலா.. தோழமைகளுக்கு தெளிவான செய்தி!

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தோழமைக் கட்சிகளுக்கு மிகத் தெளிவான தீர்க்கமான செய்தியை தெரிவித்திருக்கிறார் திமுக தலைவரும் முதலமச்சருமான மு.ஸ்டாலின்.

PT WEB

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் திமுக புதிய தொகுதி பங்கீடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூட்டணிக் கட்சிகளுக்கு தெளிவான செய்தியாக பார்க்கப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது திமுக. கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூட்டணிக் கட்சிகள் பல்வேறு விதங்களில் திமுகவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. அது கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவிற்கு ஒருவிதமான நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தவெக-வை மாற்று வழியாக முன்னிறுத்தி காங்கிரஸ் அதிகமான நெருக்கடி கொடுத்து வருகிறது என்றே சொல்லப்படுகிறது.

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை

அதிமுகவில் இருந்து ஏராளமானோர் திமுகவில் இணைவதும், அதிமுக கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் புதிய பார்முலாவை திமுக கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் பூத் கமிட்டி கட்டமைப்பு எப்படி இருக்கிறது.. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி நிலவரம் உள்ளிட்டவற்றை மதிப்பிட்டே தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

சொல்லப்பட்ட செய்தி என்ன..?

அதற்கான செய்தியை இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் மூலம் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளுக்கு தெளிவாக தெரிவித்திருக்கிறது. கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாதததால் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இந்த முறை 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. அதேபோல், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், மனித நேய மக்கள் கட்சிக்கு இந்த முறை அதேபோன்று 2 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது திமுக.

தோல்வியடைந்தால் தொகுதிகள் குறைக்கப்படும், வெற்றி பெற்றால் அதே தொகுதி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், கடந்தமுறையை விட இந்த முறை கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அந்த கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவில் திமுக இறங்கியிருக்கிறது என்று கூறப்படுகிறது. கூடுதல் தொகுதிகளைக் கேட்கும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும், முக்கியமாக காங்கிரசுக்கு சொல்லப்படும் திட்டவட்டமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.