பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர் அமைதி பேரணி நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நடைபயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு என பலரும் இருந்தனர்.
தொடர்ந்து தன் எக்ஸ் தளப்பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: ‘எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்’
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!” என்றுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் தளப்பதிவில், “தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை! உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்! எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்! ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!
தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று! மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!” என்றுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தியுள்ளனர். அதிமுக-வினரின் மரியாதை தொடர்ந்து எக்ஸ் தளப்பக்கத்தில் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த்தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்!
இருள்சூழ் தமிழ்வானுக்கு காஞ்சி வழங்கிய ஒளிவெள்ளி! அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, “நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்" பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க!” என்றுள்ளார்.