தமிழ்நாடு

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல்: ஸ்டாலின், வைகோ, திருமா கைது

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல்: ஸ்டாலின், வைகோ, திருமா கைது

webteam

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. உயர்த்தப்பட்ட கட்டணம் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளதாக  குற்றஞ்சாட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது. 

இதனையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை சற்று குறைத்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண குறைப்பு வெறும் கண்துடைப்பு என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் இன்று அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அழைப்பு விடுத்ததன் பேரில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

சென்னை கொளத்தூரில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில்  நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்‌சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனுமதியின்றி சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சைதாப்பேட்டையில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் காவல்துறையின் வாகனத்தில் செல்ல மறுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தங்கவைக்கப்பட உள்ள சமூகநல கூடத்திற்கு நடந்தே சென்றார்.