சுதீஷ், விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

'மாநிலத்துக்கு நான்; மத்தியில் மச்சான்' விஜயகாந்தின் கனவு.. ராஜ்யசபா எம்.பி ஆகிறாரா சுதீஷ்?

”அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும் போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” பிரேமலதா விஜயகாந்த்

இரா.செந்தில் கரிகாலன்

“அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும் போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

ஆனால், அந்தப் பதவி நிச்சயமாக, தேமுதிக துணைப் பொதுச்செயலாளரும் பிரேமலதாவின் சகோதரருமான சுதீஷுக்குத்தான் என அடித்துச் சொல்கிறார்கள் தேமுதிக வட்டாரத்தில். இதன்மூலம் அவரின் 16 ஆண்டுகால கனவு நிறைவேறியிருப்பதாகவும் கூறுகிறார்கள். என்ன பின்னணி? விரிவாகப் பார்ப்போம்..,

நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்திற்கென தனிக்கொடி 2000 ஆவது ஆண்டில் இதேநாளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்த வெள்ளிவிழாவையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடிநாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். ‘கேப்டன் முரசு’ மாத இதழையும், ‘கேப்டன்.காம்’ என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தபோதுதான், ராஜ்யசபா இடம் குறித்துப் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், தேமுதிக வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசும்போது, “அண்ணியார் கூறியதைப்போல நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ராஜ்யசபா இடம் குறித்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல, அது சுதீஷ் சாருக்குத்தான் என்பதும் முடிவாகிவிட்டது. ராஜ்யசபா சீட்டுக்காகத்தான் அப்போது பேச்சுவார்த்தையில் கொஞ்சம் இழுபறி ஏற்பட்டது. ஆனால், அதிமுக கடைசியில் ஒப்புக்கொண்டது. அதனால்தான், எங்களுக்கு கணிசமாக வாக்குவங்கி உடைய கள்ளக்குறிச்சி தொகுதியையும் நாங்கள் விட்டுக்கொடுத்தோம்.

தேமுதிக தொடங்கப்பட்டபோதே, மாநிலத்தில் கேப்டனும் மத்தியில் அவருக்கு உதவியாக சுதீஷ் சாரும் என பேசி முடிவெடுக்கப்பட்டது. அதனால்தான், 2006 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் சார் போட்டியிட்டார். ஒரு லட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் சேலத்தில் போட்டியிட்டு, லட்சம் வாக்குகளைப் பெற்றார். 2019 தேர்தலில், அதிமுகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மீண்டும் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு, 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பிடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2024 தேர்தலிலும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வெற்றி சாத்தியமா என்கிற கேள்வி ஒருபுறம், மறுபுறம் அந்த நேரத்தில் அவரின் உடல்நிலையும் கொஞ்சம் சரியில்லை. அதனால்தான், போட்டியிடாமல் தவிர்த்தார். அதேவேளையில், ராஜ்யசபா இடத்துக்கான கோரிக்கையை தலைமை வழுவாக அதிமுகவிடம் வைத்தது. அதன்படி, சுதீஷ்சார் ராஜ்யசபா எம்.பியாகவிருக்கிறார். கேப்டனின், சுதீஷ் சாரின் 16 ஆண்டுகால கனவு நிறைவேறப் போகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்” என்கிறார்கள்.