நாகை மாவட்டம் சீர்காழியில் தேமுதிக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
மயிலாடுதுறை மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சீர்காழியில் பரப்புரை மேற்கொண்டார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தன்னை அழைக்காததால் சீர்காழி நகர தேமுதிக செயலாளர் செந்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி மாவட்ட செயலாளர் ஜலபதி மற்றும் பாஸ்கர் ஆகியோரின் கார்களை செந்தில் அடித்து உடைத்தார். இது தொடர்பான புகாரில் செந்திலை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பரப்புரையில் பேசிய பிரேமலதா மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அத்துடன் மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும் எனவும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நமது பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவர் என்றும், நமது விவசாயம் சார்ந்த நதிநீர் இணைப்பு கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றபடும் என்றும் கூறினார்.