தமிழ்நாடு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக தனித்து போட்டி - வேட்பாளரை அறிவித்தார் பிரேமலதா

Sinekadhara

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு - கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா ஜனவரி நான்காம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து ஈரோடு - கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அந்தந்த கட்சிகள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கில் தனித்து போட்டியிட தேமுதிகவும் முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரேமலதா அளித்த பேட்டியில்

”இடைத்தேர்தல் வேட்பாளராக ஆனந்தனை தேர்வு செய்துள்ளோம். கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு தேமுதிக வெற்றிபெற்று இருந்தது. எனவே, இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூறினார்கள். தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளோம். இவ்வளவு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டிய தேவையில்லை. ஈ.வி.கே.எஸ் மகன் இளைய வயதில் இறந்துள்ளார். அவருக்கு இரங்கல் தெரிவித்தோம்.

கட்சியின் உட்கட்சி தேர்தல் 90% முடிவடைந்துள்ளது. இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த பொதுகுழு கூட்டம் தள்ளிப்போகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் தரப்பில் இருந்து சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நேரம் தரலாம் என இருந்தோம். தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளோம். அவர்கள் ஆதரவு அளித்தால் வரவேற்போம்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்,ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ஆதரவு அளித்தால் நேரில் சென்று ஆதரவு கேட்போம். இடைத்தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக குறித்தும் மக்களுக்கு எதிராக உள்ள பாஜக குறித்தும் பேசுவோம்” என்றார்.