தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு பேருந்து: ”ஒரே நாளில் 1.65 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்துத்துறை தகவல்!

JananiGovindhan

தீபாவளி அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தாலும் ஜவுளி எடுப்பது, பட்டாசு வாங்குவது, பலகாரம் செய்வது என ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியிருக்கிறது.

இப்படி இருக்கையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் படைகளும் அதனூடே அதிகரித்திருக்கிறது. இதற்காகவே சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழக அரசு இயக்கிய சிறப்பு பேருந்துகளில் நேற்று (அக்.,21) ஒரே நாளில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயணம் செய்து இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

போக்குவரத்து துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் மற்றும் மாதவரம் என 5 மையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகள் உடன் 1200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு மொத்த எண்ணிக்கையாக
3300 பேருந்துகள் இன்று அதிகாலை வரை இயக்கப்பட்டது. இதில் ஒரே நாளில் 1,65,000 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுவரை 1,66,659 பயணிகள் முன்பதிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் 2 வது நாளான இன்று 3,686 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி மாலை 3.30 மணிக்கு மேல் பயணிகள் கூட்டம் இருக்கும் என தெரிவிக்கின்றனர். இன்றும் 1.50 லட்சத்தும் மேல் பயணிக்க வாய்ப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில் அனைத்து முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.