தமிழ்நாடு

களைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள்

களைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள்

webteam

மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆடை மற்றும் பட்டாசு விற்பனை களைகட்டியது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனை களைகட்டியது.

ஜவுளி மற்றும் இதர பொருட்களை வாங்க சென்னை தியாகராய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். ஆடை, பட்டாசு மற்றும் இனிப்பு உள்ளிட்ட திண்பண்டங்களை மக்கள் வாங்கிச் சென்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே துணிக்கடைகள் மிகுந்த சென்னை தி.நகரில் கூட்ட நெரிசல் அதிகரித்து விடும். துணிகள், நகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்து வித பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவரும் தி.நகர் நோக்கி படையெடுக்க தொடங்கிவிடுவார்கள். இந்நிலையில் நேற்று, தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால், மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தி.நகரில் குவிந்தனர்.

இதேபோல் வீட்டு உபயோக பொருள்களின் விற்பனையும் சூடுபிடித்தது. இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களின் விற்பனையும் ஒருபுறம் நடந்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணம். பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடியதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் தி.நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.