நெல்லை சேரன்மகாதேவியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அவகாசத்தை தளர்த்தக்கோரி தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும். அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. விதியை மீறிபட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை சேரன்மகாதேவியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.