தமிழ்நாடு

"அரசியல் கட்சியில் இணைவது நிச்சயம்... விரைவில் அறிவிப்பேன்!" - திவ்யா சத்யராஜ் விளக்கம்

Sinekadhara

அரசியல் கட்சியில் இணைவது நிச்சயம். ஆனால், எந்தக் கட்சியில் இணையைப் போகிறேன் என்பதை இன்னும் சில தினங்கள் கழித்தே வெளியிடுவேன்" என்று நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, கொரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்க ’மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். மருத்துவ துறை, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைரலான இவர், தற்போது விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று விவசாயத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்நிலையில், தனது மகள் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் என்று சத்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ‘’என் குழந்தைகள்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும், நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்’’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே, திமுகவில் திவ்யா சத்யராஜ் இணையவுள்ளதாக தகவல்கள் பரவத் தொடங்கின. 

இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது, ’’எந்தக் கட்சியில் சேருவது என்பது குறித்து எந்த தகவலையோ அல்லது அறிக்கையையோ இதுவரை எனது தரப்பிலிருந்து வெளியிடவில்லை. இதுகுறித்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.

ஒரு அப்பாவின் ஆதரவு எப்போதும் மகளுக்கு இருக்கும் என்ற அடிப்படையில்தான் எனது தந்தை அறிக்கை வெளியிட்டார். அதைவைத்து எனது வளர்ச்சிக்காக எனது அப்பாவின் புகழை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்’’ என்றார்.