டிட்வா புயல் காரணமாக கடந்த வாரம் மூன்று நாட்களாக கன மழை பெய்தது.
பின்னர் புயல் கரையை கடந்த நிலையில் இரண்டு நாட்கள் நல்ல வெயில் அடித்து வந்த ராமநாதபுரம் நகரில் திடீரென வெயிலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகர், அரண்மனை, புதிய பேருந்து நிலையம், பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் வளாக பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
இரண்டு நாட்களாக மழை நீடித்த நிலையில் வடசென்னையில் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலை சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் ஆய்வு பணிகளை முடித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேராக எம்.கே.பி நகர் மற்றும் எஸ்.எம் நகர் பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீர் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது தண்ணீர் உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர், மழைநீர் வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்பட்டால் நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
உடன் அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் சேகர்பாபு, ஆணையாளர் குமரகுருபரன் மேயர், துணை மேயர் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
டிட்வா புயல் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதைத்தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. புயல் மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குன்றத்தூர் ஒன்றியத்தில் அடையாறு கால்வாயை ஒட்டி உள்ள வரதராஜபுரம், மணிமங்கலம், ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் கனமழையின்போது அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுத்தும்.
இத்தகைய சூழலில், வெள்ள பதிப்பில் சிக்கும் மக்களை மீட்க, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகமிட்டுள்ளனர். 30 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு, பைபர் படகு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், உள்ளிட்ட உயிர் உயிர் காக்கும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இலங்கையைத் தாக்கிய டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சோகம் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
புயலின் தாக்கத்தால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 352 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடுகளை இழந்த சுமார் 2,04,000க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, மீட்புப் பணிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் கீழ், இந்தியா உட்படப் பல நாடுகள் இலங்கைக்கு அவசரகால உதவிகளையும் (உணவு, மருந்துகள், கூடாரங்கள்), மீட்புக் குழுக்களையும் அனுப்பி வருகின்றன. புயலின் பாதிப்பைச் சமாளிக்க இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கொழும்பு உட்படப் பல தாழ்வான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக, வியாசர்பாடி எஸ்.எம். நகர் பிரதான சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக தேங்கி நிற்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் 5 இடங்களில் அதி கனமழை பதிவானதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ அளவுக்கு கனமழை கொட்டியது.
அதன்படி,
பாரிமுனை 26.5 செ.மீ.
எண்ணூர் 26.4 செ.மீ.
ஐஸ் ஹவுஸ் 23 செ.மீ.
பேசின் பிரிட்ஜ் 20.7 செ.மீ.
மணலி புதுநகர் 20.6 செ.மீ. போன்ற இடங்களில் கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணிப்பு. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களிலும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒருசில இடங்களில் கனமழை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை (புதன்கிழமை) முதல் 5ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.