சென்னைக்கு தெற்கில் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது டித்வா புயல்.. 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டித்வா புயலின் வேகம் தற்போது 4 கி.மீ.ஆக குறைந்துள்ளது
கடலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.. குறிப்பாக புதுச்சேரிக்கு 4 குழுவினரும், தஞ்சாவூருக்கு இரண்டு குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அதே போல கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தனித்தனியே 240 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுடன் 4 மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு டித்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள சென்னை,வேலூர் அரியலூர் பெரம்பலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. ''அதே போல கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறையின் 8 பொறியாளர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கண்காணிப்பு பொறியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலை கொண்டுள்ள டித்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக எழும்பும் கடல் அலைகள் கரையை நோக்கி சீறி பாய்கின்றன. இந்நிலையில் 8 முதல் 11 அடி வரை கடல் அலைகள் எழும்பக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி முதல் சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளைகோவில், சந்திரபாடி தரங்கம்பாடி வரையிலான 28 மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
750 விசை படகுகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டு படகுகளை பாதுகாப்பாக கரைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
டித்வா புயல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம், புதுச்சேரியில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விளக்கம் அளித்திருக்கிறார்.
டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்ட ஆட்சியர்களை வீடியோ கால்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டிருக்கிறோம். நேற்று என் தலைமையில் உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம். ஏற்கனவே பாதிக்கப்பட்ட இடங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டுமென தெரிவித்திருக்கிறோம். சென்னையிலும் அதிக மழைப்பொழிவு இருக்குமென தெரிவித்திருக்கிறார்கள். முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவசரகால உணவுப்பொருட்ள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
ராமநாதபுரம் : டித்வா புயல் எதிரொலியாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கறது. தனுஷ்கோடி பகுதியில் மணிக்கு 65 கிமீ முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
குமரியில் தொடர் கன மழை பெய்து வந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர் வரத்து விநாடிக்கு 428 கன அடியாக குறைந்து இன்று அணை நீர்மட்டம் 43.29 அடியாக குறைந்தது.
இதனால் ஐந்து நாட்களுக்கு முன்பு 44.48 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீரை வெளியேற்றம் செய்ய துவங்கிய பொதுப்பணித்துறை இன்று 250 கன அடியாக உபரிநீர் வெளியேற்றத்தைக் குறைத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த உபரிநீர் பாய்ந்து செல்லும் திற்பரப்பு அருவியில் இன்று ஆறாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்தே திற்பரப்பு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையில் இருந்தே திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரை சாரல் மழையில் நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் காற்று கடுமையாக வீசி வருவதால் பொதுமக்கள் கடும் குளிரால் வீடுகளுக்குள் முடங்கி உள்ளார்கள். பள்ளி மாணவர்கள் கடும் குளிரில் பள்ளிக்கு சென்றார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று, நாளை, மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதும் சாரல் காற்று கடுமையாக வீசி வருகிறது. இதனால் ஓட்டு, கூரை வீடுகளில் வசிப்பவர்கள், பெரியவர்கள் ,முதியவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். மேலும் குளிரில் வாடி வருகிறார்கள். இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்களும் கடும் குளிரில் பள்ளிக்கு சென்றார்கள். இன்று இரவு முதல் மாவட்டத்தில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
டித்வா புயல் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் பாலத்தில் 60கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் 3 விரைவு ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும், சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்தும் மதுரைக்கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
டித்வா புயல் காரணமாக திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம்- தாம்பரம் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மதுரை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் உச்சப்புளி வரையும், திருச்சி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ராமநாதபுரம் வரை இயக்கப்படும் எனவும் மதுரைக்கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
டித்வா புயல் வட தமிழகத்தின் கரையை ஒட்டியே கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 30ஆம் தேதி புயலாகவும், டிசம்பர் 1ஆம் தேதி வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதி கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக அரைநாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டிருக்கிறார்.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் அரைநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் சென்னையில் இருந்து சரியாக 540 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இத்தகைய சுழலில் சென்னையில் இருக்கும் கடற்கரைகளில் காற்றின் வேகம் இயல்பை விட சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசும் அதிகப்படியான காற்றினால், கடற்கரையில் இருக்கும் மணல் துகள்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு, கடற்கரையை ஒட்டியிருக்கும் லூப் சாலையில் விழுகிறது,. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 30ஆம் தேதி அதிகாலையில், டித்வா புயல் வடதமிழகம், அதனையொட்டி உள்ள வடக்கு ஆந்திரா பகுதியை அடையக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.