பேனர் விபத்து
பேனர் விபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம்: கோவை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

PT WEB

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த புதுப்பாலம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட பணியாக பிளக்ஸ் பொருத்தும் பணியில் சேலத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டிருந்தனர்.

பேனர் விபத்து

பணியை சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலாஜி எடுத்து, துணை ஒப்பந்ததாரர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளார். நேற்று மாலை 7 தொழிலாளர்கள் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் குமார், குணசேகரன், செந்தில் முருகன் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேர் உயிரிழந்த நிலையில், வேறு சில தொழிலாளர்களை அழைத்து வந்து பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் பேனர் வைக்க அனுமதி இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேனர் விபத்து

இந்த நிலையில், மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அகற்றுவதற்கு தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.