பட்டியலின ஊராட்சி தலைவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவரான அமிர்தம், பட்டியலினத்தவர் என்பதால், அவரை தேசிய கொடியேற்ற விடாமல் ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார், துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர். அப்போது அமிர்தத்தை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுதந்திரத் தினத்தன்று சுதந்திரமாக கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டது.
இதையறித்த புதியதலைமுறை செய்தியாளர் அமிர்தத்துக்கு உரிமையை மீட்டுத்தர நினைத்து செய்தி சேகரிக்க சென்றுள்ளார். அப்போது செய்தியாளரை செய்தி சேகரிக்க கூடாது எனக்கூறி ஊராட்சி மன்றச் செயலாளர் சசிகுமார் உள்பட 5 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் செய்தியாளருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதற்கு ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மற்றும் எஸ்பி அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் இன்று,அமிர்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். பின்னர் பஞ்சாயத்து அலுவலத்தில் தனது பதவிக்கான இருக்கையில் அமரவைக்கப்பட்டார் அமிர்தம். தொடர்ந்து அலுவலகத்தின் முன்பு ஊராட்சி தலைவர் அமிர்தம் என்ற பெயரும் எழுதப்பட்டது.
இந்நிலையில், பட்டியலின ஊராட்சி தலைவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.