திமுக ஆட்சியில் மோசமான அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக தனது மகன் இன்பநிதியுடன் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, அதிகார துஷ்பிரயோகம் என்று கூறியிருக்கும் அண்ணாமலை, துணை முதல்வர் உதயநிதிக்கு 2011 தேர்தல் முடிவுகளும், அதற்கு பின் வந்த பத்தாண்டுகளும் நினைவிருக்கட்டும் என பதவிட்டுள்ளார். மன்னராட்சி மனநிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தன்னை யாரும் எழுந்து நிற்க கூறவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலர் புகைப்படங்களை வைத்து கதை கூறுவதாக தெரிவித்தார்.