தமிழ்நாடு

ரயிலை நோக்கி நடந்து தற்கொலைக்கு முயன்ற பெண் - விரைந்து காப்பாற்றிய ஆர்.பி.எஃப். வீரர்கள்

kaleelrahman

கணவனிடம் ஏற்பட்ட தகராறு காரணமா ஆம்பூர் ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ராஜி. இவரது மனைவி சந்திரமதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய சந்திரமதி ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு, ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் நோக்கி இரயில்வே பணியாளர்களை ஏற்றிச் செல்லும் ரயிலானது ஆம்பூர் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தின் நடுவில் ஒரு பெண் நடந்து செல்வதைக் கண்ட ரயில் ஓட்டுனர் ஒலி எழுப்பியுள்ளார். ஆனால், அப்பெண் தண்டவாளங்களுக்கு இடையே தலையை குனிந்துபடி நடந்து வந்து கொண்டிருப்பதை நடைபாதையில் இருந்து கவனித்த ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே பாயிண்ட்மென் ஆகியோர் விரைந்து சென்று தண்டவாளத்தை விட்டு அப்பெண்ணை அப்புறப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணிடம் ஆம்பூர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மேகராஜ் விசாரணை செய்தார்.

அப்போது அவர் தன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ஆம்பூர் ரயில் நிலையத்திற்குள் வந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவரது கணவருக்கு, இரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளர் மேகராஜ் செல்போனில் தொடர்பு கொண்ட போது கணவனின் செல்போன் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அப்பெண்ணின் வீட்டிற்கு இரயில்வே பாதுகாப்பு படை காவலரை அனுப்பி கணவர், அவரது உறவினர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகளிடம் தகவல் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இரயில் நிலையத்திற்கு வந்த குடும்பத்தாரிடமும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடமும் தக்க அறிவுரை கூறிய இரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மேகராஜ் உறவினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் அப்பெண்ணை அனுப்பி வைத்தார்.