தமிழ்நாடு

ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

webteam

ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி வழக்கு தொடர்ந்தார். ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருந்திருக்கும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயித்ததாக அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.