வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காண்பித்தால் சலுகைகள் வழங்கப்படும் என கோவையை சேர்ந்த மாலும், ஹோட்டலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காண்பித்தால் சலுகைகள் வழங்கப்படும் என கோவையை சேர்ந்த மாலும், ஹோட்டலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாலை 6 மணி வரை prozone மால் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காண்பித்தால் நாளை (18-04-19 ) மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (19-04-19 ) வரை பார்க்கிங் கட்டணத்தை செலுத்தாமல் இலவசமாக பார்க்கிங் நிறுத்திக்கொள்ளலாம் என்றும் prozone அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல கோவை நவ இந்தியா அருகே அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் neydhal ஹோட்டல், நாளை வாக்களித்ததற்கான அடையாளமாக விரல் மையை வாக்காளர்கள் காண்பித்தால் சாப்பாடு கட்டணம் குறைத்து வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி வழக்கமாக ரூ.180 வசூலிக்கப்படும் மீன் சாப்பாடு ரூ.100 ஆகவும், சைவ சாப்பாடு ரூ.150-க்கு பதிலாக ரூ.80-க்கும், கடல்வகை உணவுகள் ரூ.350-க்கு பதிலாக ரூ.280 ஆக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை நாளை முதல் 27-ஆம் தேதி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.