pa.ranjith
pa.ranjith file
தமிழ்நாடு

"கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது; மத அரசியலை கவனிக்கணும்"- கலைஞர் பாணியில் பா.ரஞ்சித்!

Kaleel Rahman

சென்னையில் நடைபெற்ற ப்ளு ஸ்டார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர்...

"ரொம்பவும் முக்கியமான நாள் இன்று. வீட்டிற்கு சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான கால கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள், இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தை உணர்த்துகிறது. அது போன்ற காலகட்டத்திற்குள் நுழையும் முன்பு, நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத் தனத்தையும், தினமும் சொல்லிக் கொடுக்கப்படும் மதவாதத்தையும் நம்மிடம் இருந்து அழிக்க, கலையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறோம்.

அயோத்தி ராமர் கோயில்

இந்த நாள் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்க போகிறோம் என்ற யோசனை நமக்கு வேண்டும். ப்ளூ ஸ்டார் என்ற பெயரே அரசியல்தான், அந்த நீல நட்சத்திரம் நம்மை சரியாக வழி நடத்தும் என நம்புகிறேன். என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது.... ”இன்று ராமர் கோவில் திறப்பு விழா நடந்துக்கிட்டு இருக்கு. அதன் பின்னாடி நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். ராமர் கோவிலுக்கான ஆதரவு எதிர்ப்பு என்பதை மீறி ஒரு சிக்கலான சூழல் இருக்கு. மதசார்பின்மை இந்தியா எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு என்பது கேள்விக் குறியாக இருக்கிறது” என்றார்.

ramar kovil

நடிகர்களும், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஆதரவு தெரிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்களே என்று கேள்விக்கு பதிலளித்த அவர்... ”கோவில் கூடாது என்பது நம்முடைய பிரச்னை இல்லை. அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பது தான் நம்முடைய கவலை” என்றார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை எல்லா கோயில்களிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்வதன் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு.. “இந்தியாவில் இப்படியொரு கோவில் திறக்கிறார்கள் என்பதை கடவுள் நம்பிக்கையோடு பார்க்கலாம். ஆனால், அரசியலாக்கப்படுவதுதான் பெரிய சிக்கலாக இருக்கிறது” என்று பதிலளித்தார்.

Rajinikanth

தொடர்ந்து அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்.. ”போனது அவரோட விருப்பம். 500 ஆண்டுகால பிரச்னை தீர்ந்திருப்பதாக ஏற்கெனவே அவரோட (ரஜினி) கருத்தை சொல்லியிருக்காரு. ஆனால், அந்த பிரச்னையின் பின்னால் இருக்கிற அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியது இருக்கு. அப்படியென்றால் சூப்பர் ஸ்டார் பேசியது தப்பா? தப்பு ரைட்டு என்பதை மீறி அதில் எனக்கு விமர்சனம் இருக்கு” என்றார்.

ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை இளையராஜா சார் வாங்க மறுத்ததாக வெளியாகும் செய்தி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ”அந்த நியூஸ் உண்மையா பொய்யா என்று தெரியல. திரௌபதி முர்முவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ரொம்ப மோசமானது.

Droupadi Murmu

ராஜஸ்தானில் தலித்களால் கொடுக்கப்பட்ட நிதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் பிரசாதம் வழங்கக் கூடாது என்பதே மோசமானது. அது உண்மையாக இருந்தால் நிச்சயமாக அது கண்டிக்கப்பட வேண்டியது” என்றார்.