தமிழ்நாடு

எதற்காக இந்த கல்வி முறை.. மாணவர்களை சாகடிக்கவா? - கரு.பழனியப்பன் ஆவேசம்

எதற்காக இந்த கல்வி முறை.. மாணவர்களை சாகடிக்கவா? - கரு.பழனியப்பன் ஆவேசம்

rajakannan

நீட் தேர்வின் மூலம் தரம் உயர்த்துகிறோம் என்கிற பெயரில் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம் என்றும், மாணவர்களை சாகடிக்கவா இந்த கல்வி முறை என்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் மத்திய அரசை நோக்கி ஆவேசக் கேள்விகளை எழுப்பினார்.

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டம் தொடர்பாக புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் பேசுகையில், “எல்லா போராட்டத்துக்கும் தொடக்கம் உணர்ச்சி தான். அதேபோல், எல்லா போராட்டத்தின் முடிவும் அதன் இலக்கை அடைவது தான். மாணவர்கள் போராட்டத்தை யாரும் தூண்டிவிடவில்லை. அரசியல்வாதிகளையே தங்கள் போராட்டத்திற்குள் மாணவர்கள் பங்கேற்கவிடுவதில்லை. பங்கேற்க அனுமதிப்பதில்லை.

மாணவர்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டீர்கள். எங்கள் பிரச்சனை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்கிறார்கள். நீட்டை எதிர்க்கும் கட்சிகள் கூட சரியாக போராடி இருந்தால் மாணவர்கள் ஏன் போராட வருகிறார்கள்.

அனிதா என்ற ஒரு பெண் நன்றாக படித்தாள். 1176 மதிப்பெண்கள் பெற்றாள். அவளுக்கு என்ன செய்துவிட்டீர்கள். இந்த கல்வியை படித்ததன் மூலம் என்ன பெற்றாள்? இந்த கல்வியை பெற்றால் என்ன? பெறாவிட்டால் என்ன? சாகிறதுக்கு கல்வியா? 

நீங்கள் யார் என்னை தரம் உயர்த்தி மேலே வர சொல்வதற்கு? நான் ரொம்ப நாளாக மேலே தான் இருக்கேன். தேர்வை எழுதி முடித்து கல்லூரி சேரும் தருவாயிள் புதிதாக இன்னொரு தேர்வை எழுத சொல்கிறீர்கள். இன்னும் எத்தனை தேர்வு எழுத வேண்டும் என்பது அவனுக்கு புரியவில்லை. இந்த தலைமுறையினர் கல்வியின் மூலமாக இந்த சமுதாயத்தை, குடும்பத்தை தன்னை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறான்” என்று கரு.பழனியப்பன் பேசினார்.