தமிழ்நாடு

நெல்லை மரணம் என்னைக் கண்கலங்கச் செய்து விட்டது: இயக்குனர் ஜனநாதன்

rajakannan

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தன்னைக் கண்கலங்க வைத்து விட்டதாக திரைப்பட இயக்குனர் ஜனநாதன் கூறியிருக்கிறார்.

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இயக்குனர் ஜனநாதன், "அந்தக் கொடூரமான சம்பவம் என்னைக் கண்கலங்கச் செய்து விட்டது. அந்தக் குழந்தைகளின் மரணத்தை என்னால் தாளவே முடியவில்லை. பொதுவாகக் குழந்தை உள்ளவர்களுக்குத்தான் இழப்பின் துயரம் தெரியும் என்பார்கள். ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு எல்லோருமே குழந்தைகளாகத் தெரிவார்கள். எனவே அவர்களுக்குத்தான் துயரம் அதிகம் இருக்கும். எனக்கு அப்படித்தான் இருந்தது.
 
இருப்பதிலேயே மிகவும் மோசமான தொழில் வட்டித் தொழில். மூலதனம் எழுதிய மார்க்ஸ். "ஏதேனும் ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதில் லாபம் ஈட்டுவது, அதில் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுவது நடக்கும். அது ஒரு தொழில். ஆனால் எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் பணத்தை வைத்தே பணம் சம்பாதிப்பது வட்டித் தொழில். இது மிகவும் மோசமான தொழில் என்றார். அந்தத் தொழில் உச்சக்கட்டமாக இப்போது எங்கே வந்து தனது கத்தியை வைத்திருக்கிறது என்பது தெரிகிறது.
 
இது ஏழை பணக்காரன் என்ற வர்க்க முரண்பாட்டின் உச்சம். இதுவரையில் நாம் எத்தனையோ மரணங்களைப் பார்த்து விட்டோம். இனப்படுகொலை வரை பார்த்தாயிற்று. மரணங்களைப் பார்க்கும் தலைமுறையாகப் போயிற்று இந்தத் தலைமுறை. ஆனால் எல்லாவற்றையும் விட இந்த மரணம் என்னை பெரிதும் பாதித்து விட்டது. மனித இனத்தின் பெரும்பகுதி இனி வாழவே முடியாத இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. பிழைப்புவாதிகளை வேரறுக்காமல் மீள்வது சாத்தியமில்லை" என்றார்.