palanisamy and lakshmi
palanisamy and lakshmi pt desk
தமிழ்நாடு

‘அப்பாவை தூக்கிப்போட தான் யாரும் வரல: ஆனா அம்மாவின்...’ சாதி மறுப்பு திருமணம் செய்த மகன் கண்ணீர்!

webteam

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கூம்பூர் பழைய மாரப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த லட்சுமி (43) என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர்.

Gramam

இந்நிலையில், பழனிச்சாமியின் சொந்த ஊரான பழைய மாரப்பன்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரின் சமூகத்தினர், பழனிச்சாமி மற்றும் அவர் மனைவியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இப்படி இவர்கள், இந்த இணையரை கடந்த 30 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்து வந்துள்ளனர். ஊர் முக்கியஸ்தர்களால் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள் இந்த இணையர். ஊருக்குள் செல்ல அனுமதியில்லாத காரணத்தால் அருகே உள்ள கூம்பூரில் வாடகை வீடு எடுத்து வீட்டின் முன்பு காய்கறி கடை நடத்தி வருகின்றனர் இருவரும்.

தலைக்கட்டு வரி வசூலிப்பதில்லை; கோவில் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி மறுப்பு!

இதுபற்றி பழனிச்சாமி நம்மிடையே பேசுகையில், “பழைய மாரப்பன்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திலும் தலைக்கட்டு வரி வசூல் செய்யப்பட்டு திருவிழா கொண்டாடப்படும். ஆனால், சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்தினால் என்னிடம் தலைக்கட்டு வரியை பெற மறுத்து விட்டனர். மேலும் கோவில் திருவிழாவிலும் பங்கேற்க அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால் எனது தந்தையிடம் தொடர்ந்து வரி வசூலிக்கப்பட்டது” என்றார்.

house

பாதையை அடைத்து நிலத்தை ஆக்கிரமித்த கிராம மக்கள்!

கிராமத்தில் உள்ள வீட்டில் பல ஆண்டுகளாக பழனிச்சாமி வசிக்காததால், அருகே உள்ளவர்கள் பழனிச்சாமியின் இடத்தில் கழிப்பறை அமைத்ததோடு வீட்டிற்குச் செல்ல முடியாதவாறு வழிகளையும் அடைத்துள்ளனர். இதுகுறித்து பழனிச்சாமி, கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தும் ‘நீ தலைகட்டு வரி செலுத்தவில்லை; உனக்கு உறுதுணையாக கிராம நிர்வாகம் இருக்காது. உன்னுடைய பிரசசனையை நீ தான் சரி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர். அதன் பிறகு பழனிச்சாமி ‘எனது நிலத்தை மீட்டு தர வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பழனிச்சாமியின் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள மறுத்த ஊர் மக்கள்!

பழனிச்சாமியின் தாய் முத்தம்மாளும் தந்தை கன்னியப்பனும் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னியப்பன் உயிரிழந்தார். அப்போது இறுதிச் சடங்கு செய்வதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பழனிச்சாமி, கூம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

mother

‘நான் கலப்புத் திருமணம் செய்த காரணத்திற்காக என்னிடம் நீங்கள் தலைக்கட்டு வரி வசூலிக்கவில்லை. ஆனால், எனது தந்தை கடந்த ஆண்டு வரை தலைக்கட்டு வரி செலுத்தி வந்தார். நான் செய்த தவறுக்கு என் தந்தை என்ன செய்வார்? தயவு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் எனது தந்தையின் இறுதி சடங்கு செய்வதற்கு வாருங்கள்’ என்று அனைவரின் காலிலும் விழுந்து கதறி அழுதுள்ளார் பழனிச்சாமி. இருப்பினும் ஊர் கட்டுப்பாட்டை மீறி உடலை அடக்கம் செய்ய யாரும் வராததால், வேறு வழியின்றி பழனிச்சாமி அவரது தாய், மனைவி மற்றும் தம்பியுடன் தந்தையை அடக்கம் செய்துள்ளனர்.

அப்பா வாழ்ந்த வீட்டில் உயிர்விட வேண்டுமென்பது எனது தாயின் கடைசி ஆசை

பழனிச்சாமியின் தந்தை உயிரிழந்த நிலையில், தாய் முத்தம்மாளும் ஊரில் வசிக்கக் கூடாது என்று கிராம முக்கியஸ்தர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். ‘உங்களுக்கு வீட்டை வாடகைக்கு தந்தால் என்னையும் ஊரைவிட்டு ஒதுக்கி விடுவார்கள்’ என்று அவரும் வீட்டை வாடகைக்கு தரவில்லையாம். ஆனால், வீட்டின் முன்பு உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உறவினர் கூறியுள்ளார். அப்படியே செய்துள்ளனர் இவர்களும்.

palanisamy

இந்நிலையில், ‘உன் தாயார் முத்தம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் எனது வீட்டில் உனது தாயார் இறக்கக் கூடாது. இந்த இடத்தையும் காலி செய்’ என்று உறவினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்கிறார் பழனிச்சாமி. “நான் என் கணவருடன் வசித்த வீட்டில் தான் எனது உயிர் பிரிய வேண்டும்” என்று முத்தம்மாள் பழனிச்சாமியிடம் கூறியுள்ளார். தனது தாயின் ஆசையை நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவர், காவல் நிலையம், அரசு அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் முறையிட்டும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

ஊர் மக்களிடம் பழனிச்சாமி வைக்கும் கோரிக்கை...

“சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் என்னையும் எனது குடும்பத்தையும் 30 ஆண்டுகள் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர். எனது தந்தை இறப்பில் கூட கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தற்போது எனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனது தந்தையை அனாதை போல் இறுதி சடங்கு செய்தது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. அதே போல் எனது தாயாருக்கும் நடக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து என் தாயாருக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும்.

lakshmi

கிராமத்தில் சேர்ந்து வாழ வழி வகுக்க வேண்டும். கோவில் திருவிழாவுக்கு தலைக்கட்டு வரி வசூலிக்க வேண்டும். எனது தாத்தா, தந்தை மற்றும் நான் வாழ்ந்த வீட்டில் எனது மகனும் வாழ வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து மேலும் தகவலை அறிய ஊர் முக்கியஸ்தர் செல்வகுமார் என்பவரை தொடர்பு கொண்டு ‘ஏன் பழனிச்சாமியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு அவர், ‘நான் பதிலளிக்க முடியாது, இது ஊர் எடுத்த முடிவு. அதனால் ஊரில் உள்ள அனைவரும் தான் பதிலளிக்க முடியும்’ என்றவர், ‘நீங்கள் அரைமணி நேரம் காத்திருங்கள். அனைவரையும் அழைத்து வந்து உங்களுக்கு விளக்கம் அளிக்கச் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றவர் இரண்டு மணி நேரமாகியும் வரவில்லை. இது தொடர்பாக விளக்கம் கொடுக்க ஊர் முக்கியஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை.

shop

சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக ஒரு குடும்பத்தை கடந்த 30 வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது கொடுமையிலும் கொடுமை.

என்று ஒழியும் இந்த சாதிய பாகுபாடு?

வேடசந்தூர் செய்தியாளர்: விஜயபாண்டியன்