செய்தியாளர்: J.அருளானந்தம்.
திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ள்ளது. இந்நிலையில் இந்த இருவழிச் சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.
ஆனால், நான்குவழிச் சாலை பணிகள் எதுவும் செய்யாமல் சுங்கச் சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை சுங்கச் சாவடியை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.
சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சுங்கச் சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.