திண்டுக்கல்லில் பல்லி இறந்த கிடந்த குளிர்பானத்தை குடித்த 12 வயது சிறுவன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், பெயின்டிங் வேலை செய்து வரும் இவர், தனது மனைவி மேனகா மற்றும் மகன் பிரதீப்புடன் (12) வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பிரதீப், அனுமந்த நகரில் உள்ள பலசரக்கு கடைக்குச் சென்று 10 ரூபாய் கருப்பு கலர் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.
இதைடுத்து குடித்து விட்டு கலர் பாட்டிலை பார்த்தபோது, பாட்டிலின் அடியில் இறந்த பல்லி கிடந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பிரதீப்பை அவரது தாய் மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.