செய்தியாளர்: காளிராஜன் த
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140-க்கு மேற்பட்ட பெண்களுக்கு லோன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழு தலைவிகள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதில், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி, சுதா மற்றும் பாண்டியம்மாள் ஆகியோர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லோன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பிய ஒவ்வொரு பெண்களும் தனது குழுவில் 20 முதல் 25 நபர்களை இணைத்து மொத்தமாக 140-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து ரூ.5000 வீதம் வசூல் செய்து காளீஸ்வரி, சுதா, பாண்டியம்மாள் ஆகியோரிடம் ரூ.7 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
ஆனால், தற்போது வரை லோன் பெற்றுத் தராததால் சம்பந்தப்பட்ட 3 பெண்களிடம் கேட்டபோது அவர்கள் மேலும் அனைவரும் இணைந்து 1.5 லட்சம் வசூல் செய்து தரும்படி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் குழு தலைவிகள் இணைந்து லோன் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட காளீஸ்வரி, சுதா மற்றும் பாண்டியம்மாள் ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.