சிறுமலையில் NIA அதிகாரிகள் சோதனை pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சிறுமலையில் NIA அதிகாரிகள் சோதனை

சிறுமலையில் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் கியூ பிராஞ்ச் காவலர்கள் விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கும், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் ஜே.எம்.ஜே என்பவருக்குச் சொந்தமான பட்டா காட்டில் துர்நாற்றம் வீசும் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் சோதனை செய்த போது இறந்த நபரின் அருகில் பேட்டரி, வயர் மற்றும் வெடிபொருட்கள் இருந்துள்ளது. அப்போது அந்த வெடிபொருள் வெடித்ததில் மணிகண்டன், கார்த்திக் ஆகிய இரு காவலர்கள் மற்றும் ஆரோக்கிய செல்வம் என்ற வனத்துறையினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகன பேட்டரி மற்றும் 8 ஜெலட்டின் குச்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பேட்டரி, வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால் கொலையா? அல்லது சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் தாலுகா காவல் நிலையம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். சடலமாக கிடந்த நபர் கேரளாவைச் சேர்ந்த சபு என்பவருக்கு ஏற்கனவே சிறுமலையில் சொந்தமாக இடம் இருந்தது குறிப்பிடதக்கது.