தமிழ்நாடு

திண்டுக்கல்: 300 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலில் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

webteam

வடமதுரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சவுந்தர்ராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன. பெருமாள், சௌந்தரவல்லி தாயார் சன்னதி கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைத்தல், கோயில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து முடிந்தது.

இதையடுத்து 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சுதர்சன ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மகா தீபாராதனை, காயத்ரி ஹோமம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து இன்று காலை மேளதாளங்கள் முழங்க புனித தீர்த்தங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, ராஜகோபுரம், சொர்க்கவாசல் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பக்தர்கள் அனைவருக்கும் மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.