செய்தியாளர்: ரமேஷ்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியில் புனித உத்திரியமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. 26 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதி மின்தேர் பவனி நடைபெற்றது.
இந்த நிலையில் (வியாழக்கிழமை) நேற்று மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார ரதத்தில் ஏசுநாதர் எழுந்தருளிய காட்சி நடந்தது. வானவேடிக்கை முழங்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் கும்மியாட்டத்துடன் மின் ரத தேர்பவனி நகர்வலம் வந்தது.
அப்போது வழி நெடுகிலும் திரளான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இதைத் தொடர்ந்து ஜூன்.8 -ஆம் தேதி இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.