செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், செந்தில்குமாரும் அவரது மனைவி கன்யாவதி ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இயக்குநர்களாக இருந்து ராயர் சிட்ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு மட்டுமன்றி மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள தொழில் அதிபர்களுக்கு நிதி அளித்து வட்டி தொழில் செய்தும் வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வரும் செந்தில்குமார், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவிப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் செந்தில்குமார் தொடர்புடைய இரண்டு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் குழந்தைவேல் மற்றும் முருகன் சகோதரர்களுக்குச் சொந்தமாக இயங்கி வரும் தனபாக்கியம் நகைக்கடை, வஞ்சியம்மன் பெட்ரோல் பங்க், மற்றும் அவர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.