Dindigul I.Leoni
Dindigul I.Leoni pt desk
தமிழ்நாடு

‘விதியை மீறியது யாரா இருந்தாலும்..’ - திண்டுக்கல் ஐ.லியோனிக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம்!

webteam

சென்னை போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் வாகன ஓட்டிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதமும் விதித்து வருகிறது.

car

இதில் நேரடியாக மட்டுமன்றி சமூக வலைதளங்கள் மூலமும் காவல்துறைக்கு அதிக அளவில் விதிமீறல்கள் புகார்கள் செல்கின்றன. அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீதும், உடனடியாக விசாரணை நடத்தப்படுகின்றன. விசாரணையில் ஒருவேளை விதிமீறல் உறுதிசெய்யப்பட்டால், உடனடியாக அபராதம் விதிக்கின்றனர் போலீஸார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று தமிழ்நாடு அரசு இலட்சினை பொருத்தி சென்றுள்ளது. அந்த காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்பட்டும், பம்பர் பொருத்தப்படும், நம்பர் பிளேட் சரியாக இல்லாமலும் இருப்பதாகக் கூறி ட்விட்டரில் ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்

அதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து காவல்துறை கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாய், நம்பர் பிளேட் முறையாக இல்லாததால் 1,500 ரூபாய், பம்பர் போட்டிருந்ததற்காக 500 ரூபாய் என மொத்தம் 2,500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான சலானை தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்தது. அதுவும் அந்த சலானை புகார் அளித்தவருக்கே ரீட்வீட்டில் பதிவிட்டனர் காவல்துறையினர்.

Traffic police fined

இதைத் தொடர்ந்து நடைபெற்ற போக்குவரத்து காவல்துறை விசாரணையில் அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு சொந்தமானது என்பதும், அவர் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலட்சினையை தனது சொந்த காரில் அவர் பொறுத்தி இருந்ததும் தெரியவந்துள்ளது.

எனினும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.