பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பேருந்து pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பேருந்து - கல்லை போட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பேருந்தை கல்லை போட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிறுத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் 8 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆட்சியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வீரசின்னம்பட்டிக்கு அரசு பேருந்து புறப்பட்டது. அப்போது அந்தப் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இதையடுத்து பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் கிளம்பிய நிலையில், பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் டிரைவர் சுதாரித்துக் கொண்டு பஸ்சின் வேகத்தை குறைத்தார். உடனே நடத்துநர் பஸ்சை விட்டு இறங்கி சாலை ஓரத்தில் கிடந்த கற்களை டயருக்கு முன்பு போட்டு பஸ்சை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சிறிது நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் விரைந்து வந்து பஸ் பிரேக்கில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.