செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் செம்மடைப்பட்டியைச் சேர்ந்த சிவரத்தினம் என்பவர் கார் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இந்த கார் சென்டரில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து இங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் தீக்கிரையாகின. இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்தின் தலைமையில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்த கார்களை நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.