GOVT SCHOOL  PT
தமிழ்நாடு

அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவு? கொந்தளிக்கும் பெற்றோர்கள்.. திண்டுக்கல்லில் பரபரப்பு!

பள்ளியின் குடிநீர்த் தேவைக்காக முதல் மாடியில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் மாணவர்கள் அந்தத் தொட்டியைப் பார்த்தபோது, பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

PT WEB

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர், தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சுமார் 213 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் குடிநீர்த் தேவைக்காக முதல் மாடியில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் மாணவர்கள் அந்தத் தொட்டியைப் பார்த்தபோது, பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட மாணவர்கள் அந்தக் கவரை வெளியே எடுத்துள்ளனர். மேலும், அந்தக் கவரின் அருகே எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்த துண்டுச்சீட்டு ஒன்றும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

INVESTIGETION

இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் வடமதுரை காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், வடமதுரை காவல்துறையினரும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் சுமார் நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய வேடசந்தூர் தாசில்தார் ராஜேந்திரன், மலக்கழிவு கலந்ததாகக் கூறப்படும் தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சின்டெக்ஸ் தொட்டி ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

WATER TANK

இதற்கிடையே, தகவலறிந்து பள்ளியில் குவிந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ”எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பிய அவர்கள், விசாரணை முடியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: காளிராஜன்

புகைப்படங்கள்: நாகராஜன்