கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | மரம் விழுந்து கட்டட கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

திண்டுக்கல்லில் மரம் விழுந்து கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டர் அருகே ரவுண்ட் ரோடு பகுதியில் மிக பழமையான புளிய மரம் ஒன்று வேர் பகுதி பட்டுப்போன நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அந்த மரம் உடைந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற ஆரோக்கிய மாதா கோயில் தெருவில் வசிக்கும் கட்டட கூலித் தொழிலாளி குணசேகரன் என்பவர் மீது விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டியெடுத்து உயிரிழந்த குணசேகரின் உடலை மீட்டனர். இதனை அடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இப்பகுதி மக்கள் இந்த மரத்தை அகற்ற வேண்டும் என பலமுறை மாநகராட்சிக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் மரத்தை அகற்றவில்லை என குற்றம்சாட்டினர். இது குறித்து மாநகராட்சி தரப்பில் கூறிய போது, “புகார் மனு எதுவும் பெறப்பட்டதாக தெரியவில்லை. மரத்தின் மேல் பகுதி நன்றாவே உள்ளது. அடிப்பகுதியே தற்போது உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.