தமிழ்நாடு

திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு புதைக்கப்பட்டதாக புகார்

webteam

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாட்டை கொலை செய்து புதைத்ததாக எழுந்த புகாரை அடுத்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான வீட்டை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜா முகமது வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், முறையாக வாடகை கொடுத்து வந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன் கொரோனாவிற்கு பின் சரியாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், வாடகை தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது பலமுறை மணிகண்டனிடம் கேட்டும் பணம் தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது மாந்திரீகம் செய்து பசுவை பலியிட்டு வீட்டில் புதைத்துள்ளதாகவும், அதே போல் உன்னையும் கொலை செய்து புதைத்து விடுவேன் என மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், 429 மிருகவதை தடைச் சட்டம், 508 மிருகங்களைக் கொன்று புதைப்பது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு முன்னிலையில் போலீசார், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மாடு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர்.

இதையடுத்து புதைக்கப்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் சதை ஆகியவற்றை ஆய்வுக்காக கால்நடை மருத்துவர் குழு எடுத்துச் சென்றது. மருத்துவர்கள் வழங்கக் கூடிய அறிக்கையை அடிப்படையில் அங்கு புதைக்கப்பட்டது காளை மாடா அல்லது பசு மாடா என்பது தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.