ஆட்டோ ஓட்டுநர் விபரீத முடிவு pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | வாங்காத டிராக்டருக்கு தவணை கட்டச் சொல்லி மிரட்டல் - ஆட்டோ ஓட்டுநர் விபரீத முடிவு

வேடசந்தூர் அருகே வாங்காத டிராக்டருக்கு தவணை கட்டச் சொல்லி தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் ஆட்டோ ஓட்டுனர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: திவ்யஸ்வேகா

வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (58). இவர், சீத்தமரம் நால்ரோட்டில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு தவமணி (52) என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து வந்த டிராக்டர் கம்பெனி விற்பனையாளர்கள் அவரிடம் பேசி டிராக்டர் வாங்கி ஓட்டினால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினர். முருகன் டிராக்டர் வாங்குவதற்காக திண்டுக்கல்லில் உள்ள டிராக்டர் கம்பெனிக்குச் சென்றார்.

Dindigul GH

இதையடுத்து அவர்களும் டிராக்டரை காட்டி அதை தவணை முறையில் வாங்க ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஏஜெண்டுகளிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்களும் தாங்கள் வைத்திருந்த டாக்குமெண்ட்களில் முருகனிடம் கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்பு ஊருக்கு வந்த முருகன் சில நாட்கள் கழித்து டிராக்டர் கம்பெனிக்குச் சென்று என்னால் டிராக்டரை ஓட்டி சம்பாதித்து தவணை கட்ட முடியாது. எனவே எனக்கு டிராக்டர் வேண்டாம் என கூறிவிட்டு வந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்த ஒட்டன்சத்திரம் தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்கள் நீங்கள் டிராக்டர் வாங்கியதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்ட வேண்டிய தவணை தொகை 58 ஆயிரத்தை கட்டவில்லை. உடனடியாக தொகையை கட்டுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு முருகன் நான் தான் டிராக்டரை வாங்கவில்லையே அப்புறம் ஏன் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கட்டவில்லை என்றால் போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அடிக்கடி போன் மூலமாகவும் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

Death

இதையடுத்து நேற்று காலை முருகனுக்கு போன் செய்த நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. தான் வாங்காத வாகனத்திற்கு தவணை கட்டச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என்று சக ஆட்டோ ஓட்டுநர்களிடம் முருகன் புலம்பியுள்ளார். அதன் பின்னர் பூச்சி மருந்தை வாங்கி குடித்துவிட்டு ஆட்டோவில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முருகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்;பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.