திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் கைதிகளை பார்க்க உறவினர்களிடம் ஜெயிலர் லஞ்சம் கேட்பதாகக்கூறி உறவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் ஜெயிலராக ராஜேந்திரன் என்பவர் இருந்து வருகிறார். இந்த சிறைச்சாலையில் 182 கைதிகள் உள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் ஜெயிலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்வதாக புகார் உள்ளது.
மேலும் கைதிகளுக்கு, உறவினர்கள் கொடுத்து அனுப்பும் பொருட்கள் அனைத்தும் சரியாக சென்று சேர்வதில்லை. அதேபோல் சரியாக உணவு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டி இன்று காலை 150-க்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவு சாப்பிடாமல் புறக்கணித்தனர்.
இதனிடையே கைதி ரவிக்குமார் என்பவரின் மனைவி கவிதா, சிறைச்சாலை அதிகாரியின் நடவடிக்கையை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட கிளைச் சிறை வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் கவிதாவை சமாதானம் செய்து தர்ணா போராட்டத்தை கைவிட செய்தனர்.