தமிழ்நாடு

திண்டுக்கல்: 3 நிமிடத்தில் 10 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

kaleelrahman

திண்டுக்கல்லில் மூன்று நிமிடத்தில் பத்து திருக்குறள் ஒப்பிக்கும் நபருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.


திண்டுக்கல்லில் பி.ஆர்.என்.பி கல்வி நிறுவனம் சார்பில் திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் பொதுமக்களிடையே கல்வி விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் மூன்று நிமிடத்தில் பத்து திருக்குறள் கூறினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம். அதேபோல 10 பொது அறிவு வினாவிற்கு பதில் கூறினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம். கல்வி சார்ந்த ஸ்லோகன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறந்த ஸ்லோகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல் இலவசம் என விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் திருக்குறள் ஒப்பித்தும், பொது அறிவு வினாக்களை கூறியும், ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்றுச் சென்றனர். இந்த போட்டியில் காவல்துறையை சேர்ந்தவர்கள், குழந்தைகள் என ஆர்வத்துடன் பலர் கல்வி ஸ்லோகன் எழுதி பெட்டகத்தில் போட்டுச் சென்றனர். இதில் குறிப்பாக 8 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் விரைவாக 10 திருக்குறளை கூறியதால் அந்த சிறுமியை பாராட்டும் வகையில் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் மாணவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் பற்றை வளர்க்கவும் இது மாதிரியான போட்டிகள் நடத்தப்படுவதாக பி.ஆர்.என்.பி கல்விக் குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.