இரட்டை இலைச் சின்னம் பெற கையூட்டு கொடுக்க முயற்சித்த வழக்கில், டிடிவி தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி சார்பாக இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார், டிடிவி தினகரன். அவருடன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை, சிபிஐ ஆய்வு மையத்தில் ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி போலீசார், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. குரல் மாதிரியை பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் மறுப்பு தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியைப் பதிவு செய்ய விதிகள் இல்லை என அவர் தரப்பில் கூறப்பட்டது.
இவ்வழக்கில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமின் மனுவை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் ஒரு மாதமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், டிடிவி தினகரன்.