madras high court pt desk
தமிழ்நாடு

கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம்செய்வதால் தீட்சிதர்கள் உரிமை பாதிக்கப்படுகிறதா?- நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம், நடராஜர் கோவில் கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும்போது, தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடாமல் மூன்றாவது நபர் எப்படி வழக்கு தொடர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

webteam

சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி, கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோவில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது.

இந்நிலையில், கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

natarajar temple

தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, தீட்சதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

temple

கோவிலை நிர்வகிக்கவே உச்ச நீதிமன்றத்தால் தீட்சதர்கள் நியமிக்கப்பட்டனர், ஆனால், கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

தீட்சதர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடாமல், அவர்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக மூன்றாவது நபரான மனுதாரர் தாக்கல் செய்த வழக்கை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.