கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியுடன் ஒருங்கிணைக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விதித்திருந்த 10 நாள் காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது, உட்கட்சி பிரச்னை குறித்து அமித் ஷாவிடம் பேசுகிறார் என்கிறார்கள், ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் எனவும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையனின் இந்த கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உட்பட அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் வரவேற்றிருந்தனர். இந்தநிலையில், இந்த கருத்தை தெரிவித்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில் உட்கட்சி பிரச்னை குறித்து பேசியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மழை காரணமாகத்தான் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. உடனே எடப்பாடி பழனிசாமி அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து உள்துறை அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்கிறார் என செய்தி வெளியானது. அதிமுகவை எவராலும் ஒன்றும் பண்ண முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான்முக்கியம் , இம்மி அளவு கூட அதனை விட்டுக்கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.
சிலபேர் கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போடுகிறார்கள், அந்த கைக்கூலிகள் யார் என அடையாளம் கண்டுவிட்டோம், அவர்களுக்கு விரைவில் முடிவுக்கட்டப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சிலபேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், அவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம், ஆனாலும் திருந்தவில்லை, மீண்டும் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். இன்னொருவர் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை கடத்திக்கொண்டு போனார். இவர்களை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.
எனக்கு உறுதியான எண்ணம் மன நிலை உண்டு, எதற்கும் அஞ்ச மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது என தெரிவித்த அவர், மத்தியில் இருந்து யாரும் என்னை அச்சுறுத்தவில்லை, நமக்கு நல்லது தான் செய்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கபலிகரம் செய்ய பார்த்தார்கள், ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள், அவர்களிடம் இருந்து காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருந்தவர்கள்தான் எனவும், அந்த நன்றியோடு நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.
பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து திட்டவட்டமாக பேசிய அவர், கட்சிக்கு உழைப்பவர்களைதான் அனுசரித்து செல்ல முடியும். வெட்டி பேச்சு பேசுபவர்களை அனுசரித்து செல்ல முடியாது. சில பேர் அதிமுகவை அடமானம் வைக்க பார்க்கிறார்கள். அதில் இருந்து காப்பாற்ற அனைவரும் துணிந்து நிற்க வேண்டும். அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள், கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் மன்னிக்க மாட்டான் என தெரிவித்தார்.
மேலும், ஊடகங்களில் அதிமுக செய்தியை 4 நிமிடம்தான் காட்டுவார்கள். ஒன்றும் இல்லாத செய்தியை நாள் முழுவதும் காட்டுகிறார்கள் என நடிகர் விஜய் பிரசாரம் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.