எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

"ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம்.. என்னை யாரும் மிரட்ட முடியாது" - எடப்பாடி பழனிசாமி

மத்தியில் உள்ளவர்கள் அச்சுறுத்தல் கொடுத்தது இல்லை என்றும் என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

PT WEB

இபிஎஸ் எல்லாவற்றுக்கும் தயார்

தராசு ஷ்யாம்

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய தராசு ஷ்யாம், “அதிமுகவில் ஒருங்கிணைப்பு மறு இணைப்பு கூட்டணி என எதுவும் சாத்தியமில்லை என்றுதான் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். டிடிவியுடன் எவ்விதமான கூட்டணியும் இல்லை.. டிடிவிக்கும் அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நாங்கள் எண்டிஏவில் இல்லை என அவர் சொல்லிவிட்டார். ஆகவே டிடிவி இந்த ஆட்டத்தில் இல்லை. அடுத்தது ஓபிஎஸ் மற்றும் சசிகலா. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரையில் இபிஎஸ் நிலைப்பாடு ஒன்றுதான். எப்போது அதிமுக தலைமைக் கழகத்தில் நுழைந்தார்களோ என்றே அதிமுகவில் நீடிப்பதற்கான அந்தஸ்தை இழந்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டார். கைக்கூலி என்று சொல்வது செங்கோட்டையன் என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன். கைக்கூலியை வைத்து ஆட்டம் போடுகிறார்கள் என்று சொல்வது பாஜக என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால், பாஜக கூட்டணியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தன்மானம் முக்கியம் என்று வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். காரணம் செங்கோட்டையனை வைத்து ஆட்டம்போடுவது ஓபிஎஸ் என்று சொல்ல முடியாது. காரணம், செங்கோட்டையன் கூறியதற்கு ஓபிஎஸ் வழிமொழிந்தார் அவ்வளவுதான். இதில் சசிகலா பற்றிய பேச்சு எதுவுமே இல்லை. அவரிடம் கட்சி பற்றிய அறிவிப்பு இல்லை. எனவே அதைப்பற்றி நாம் ஆராய முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறார் என்றுதான் நான் இதிலிருந்து பொருள் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்...

எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தருமபுரியில் எழுச்சி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் திட்டமிட்டு இருந்தோம். வானிலை ஆராய்ச்சி மையத்திடம் கேட்டபோது மழை வருவது உறுதி எனத் தெரிவித்தார்கள். அதன்காரணமாக இம்மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எழுச்சிப்பயணம் தொடரும் என அறிவித்தோம். உடனே எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சரை சந்திக்கிறார்.. உட்கட்சி பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்கிறார்கள். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் எங்களுக்கு முக்கியம். அதில் இம்மியளவுகூட நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். சிலபேரை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு ஆட்டம்போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். அந்தக் கைக்கூலிகளை அடையாளம் கண்டுகொண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவுகட்டப்படும். அதிமுக தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா? தலைமைக்கழகம் தொண்டர்களின் சொத்து. இன்னொருவர் இருக்கிறார். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏக்களை கடத்திச் சென்றார்கள். இவர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டுமா?" எனத் தெரிவித்திருக்கிறார்.

மறுப்பு தெரிவித்த அமித் ஷா

அமித் ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணத்தை மாற்றி அமைத்ததாக வெளியான செய்திக்கு பழனிசாமி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

என்னை யாராலும் மிரட்ட முடியாது

மத்தியில் உள்ளவர்கள் அச்சுறுத்தல் கொடுத்தது இல்லை என்றும் என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.