புத்தக வாசிப்பு
புத்தக வாசிப்பு புதிய தலைமுறை
தமிழ்நாடு

பள்ளி மாணவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வித்தியாச முயற்சி.. உற்சாகமடையும் மாணவர்கள்

PT WEB

பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்வதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம், வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. மாணவர்களின் கற்பனை திறனை கூட்டி வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காகவே, இப்படியான வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்திருக்கிறது திருச்சி மாவட்ட நிர்வாகம். அப்படி என்ன முயற்சி அது? பார்க்கலாம்...

எங்கு திரும்பினாலும் அரங்குகள், அதில் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள், கருத்தரங்கம் என வாசிப்பாளர்கள் மனதை கொள்ளை கொள்ளும் திருச்சி புத்தக திருவிழாவில், புதியதாக இடம்பெற்றிருக்கும் சிறார் அரங்கம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புத்தக வாசிப்பு

நவீன யுகத்தில் செல்போனிலேயே மூழ்கி கிடக்கும் மாணவர்களை தட்டி எழுப்பி, கற்பனை உலகில் மிதக்க செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரங்கம், அவர்களை கதைகளின் உலகிற்கு கையை பிடித்து அழைத்துசெல்கிறது. கோமாளி வேடம் கட்டி, கையில் தடியுடன் நபர் ஒருவர், கடல் பூதத்திலிருந்து ஒவ்வொரு கதைகளையும் சுவாரசியம் குறையாமல் நகைப்புடன் கூற, ஆர்வத்துடன் கேட்டு துள்ளி குதிக்கிறார்கள் மாணவர்கள்.

இது குறித்து மாணவி செம்மொழி கூறுகையில், “இதுபோல் கதைகளை கேட்கும்போது, புத்தகங்களை படிப்பதற்கான ஆர்வம் அதிகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கதை கூறுபவரான வேலு தெரிவிக்கையில், ”குழந்தைகளை இங்கு அழைத்து வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. அவர்களிடம் ஒரு நல்ல மாற்றத்தை காண முடிவதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முயற்சி,
நிச்சயம் பாராட்டுக்குரியதே...”
என்று தெரிவிக்கிறார்.