கிருஷ்ணகிரி அருகே டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலைகளில் கொட்டி வீணானது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு கொண்டுசெல்ல 20,000 லிட்டர் டீசல் எரி பொருளை சுமந்தவாறு வந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மாதேபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுனர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் இந்த விபத்தில் டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்டு அதில் கொண்டுவரப்பட்ட டீசல் சாலைகளில் ஆறாக ஓடியது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கிராம மக்கள் சாலைகளில் வீணாக ஓடிய டீசலை ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கேன்களில் நிரப்பிக்கொண்டு சென்றனர். வேகமாக பரவிய இந்த தகவலால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தை கலைத்து பாதுகாப்பான முறையில் சாலையின் நடுவில் கவிழ்ந்திருந்த டேங்கர் லாரியை கிரேன் வாகன உதவியுடன் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கவிழ்ந்து கிடக்கும் எரிபொருள் டேங்கர் லாரிகள் எந்நேரமும் வெடிக்க வாய்ப்புள்ளதால், அதில் மக்கள் டீசலை பிடித்துச்செல்லும் செயல் பெரும் பேரிழப்பை ஏற்படுத்தும் சம்பவமாக மாறும் என சமூக ஆர்வலர் கூறுகின்றனர்.