தமிழ்நாடு

அதிமுக விவகாரத்தில் தனிப்பட்ட முடிவை எடுக்கவில்லை - கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல்

அதிமுக விவகாரத்தில் தனிப்பட்ட முடிவை எடுக்கவில்லை - கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல்

webteam

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவில்லை, நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தி உள்ளார் என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி "அதிமுகவின்" செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த போது எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் நிலைமையை கட்டுப்படுத்த அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீலிட்டு சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு நாளை மறு தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறையினர் வன்முறை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது எனவும், இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி கே பழனிச்சாமி இடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை மாறாக நீதிமன்ற உத்தரவையே செயல்படுத்தி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.