'வைரவா அந்த விளக்கை அணை' என்று உதவியாளரிடம் கூறிவிட்டு படுக்கச் சென்ற காமராஜரின் உயிர் பிரிந்தது. இரண்டு நாட்களாக தமிழகத்தில் டிவிட்டர், ஃபேஸ்புக் என எங்கு சென்றாலும், இந்த வரி தான் தென்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ்காரர்கள், காமராஜருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தங்களின் கண்டனக் குரல்களை பதிவு செய்துவருகிறார்கள். இன்னொரு பக்கம், அவர் எளிமையானவர் என்கிற பிம்பத்திற்கு இதன் மூலம் ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்கிற ரீதியில் இந்த விளக்கை அணை சொற்றொடர் மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம் வாருங்கள்.
இரண்டு நாட்களாக ஒட்டுமொத்த இணையத்திடமும் பேசுபொருளாகிறார் பெருந்தலைவர் காமராஜர்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா காமராஜருக்கு ஏசி இல்லை என்றால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால், தங்கும் இடங்களில் எல்லாம் குளிர்சாதன வசதி செய்துதர கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டதாகவும், உயிர்போகும் முன்பு கருணாநிதியின் கையைப்பிடித்துக்கொண்டு, நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று காமராஜர் கேட்டுக்கொண்டதாகவும் பேசியிருந்தார் திருச்சி சிவா. இதற்கு எதிரான கண்டனக்குரல் தமிழக காங்கிரஸின் பல மட்டங்களில் இருந்து வந்தது. செல்வப்பெருந்தகை, திருச்சி வேலுச்சாமி , மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலர் சிவாவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தார்கள். திமுகவின் கட்டுக்கதைகளால் தான் காமராஜர் வீழ்ந்தார் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்னும் கடுமையாகவே தன் எதிர்ப்பை பதிவு செய்தார். ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் என்றும் பதிவு செய்திருந்தார்.
'வைரவா அந்த விளக்கை அணை' என்று உதவியாளரிடம் கூறிவிட்டு படுக்கச் சென்ற காமராஜரின் உயிர் பிரிந்தது என்கிற வரியும் நேற்று முழுக்க சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டன. இன்னும் சிலரோ, 1980களில் தானே ஏசியே வந்தது. அதற்கு முன்பு ஏது ஏசி என வரலாற்று ஆவணங்களை எல்லாம் கொட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் ஒருவர் ஏசி வைத்த அறையில் இருந்தார் என்பது அவ்வளவு பெரிய அவதூறா என்கிற கேள்வி எழுகிறது. எளிமையானவர் என்று சொல்வதாலேயே ஒருவர் ஏசி அறையில் இருப்பதுகூட பெருங்குற்றமாக நினைத்து எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் . வரலாறு என்ன சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்,
இந்து தமிழ் திசையில் தேசிய முரசு கோபண்ணா அவர்கள் காமராஜர் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். காமராஜரின் கடைசி நாட்கள் என்கிற கட்டுரையில் 'பிற்பகல் 1.30 மணிக்கு அவர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார். மாலை சுமார் 3.05 மணி அளவில் உடம்பு முழுவதும் வியர்த்துவிட்டது. அந்த அறையில் குளிர்சாதனப் பெட்டி இயங்கிக்கொண்டிருந்த நிலையிலும் அவரது உடம்பு வியர்த்திருந்தது. காமராஜர் தமது உதவியாளர் வைரவனை அழைத்து, மருத்துவர்களைக் கூப்பிடும்படி கூறினார்' என குறிப்பிடுகிறார். இதன் மூலம் அவரின் அறையில் குளிர்சாதனை வசதி இருந்தது ஏறக்குறைய உறுதியாகிறது.
தோழர் ஜீவானந்தம் குறித்து தமிழருவி மணியன் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசிய ஒலிநாடா ஒன்று யூடிபில் இருக்கிறது. அதில் இன்னும் தெளிவாகவே , " காமராஜாரால் தன் கடைசி காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாமல் இருக்க முடியவில்லை. அது அவர் குறையல்ல. அவர் அதற்குப் பழக்கப்பட்டுப்போன நிலையில், குளிர்சாதன பெட்டி இல்லாத அறையில் , ஒரு மணி நேரம் அவரால் இருக்க முடியவில்லை. திருமலைப்பள்ளி வீதியில் ஒரு நல்ல கட்டிடத்திற்குள்ளே தான் அவர் வாழ்ந்தார். ஆனால் வெறும் ஒழுகுகின்ற கூரையில் வாழ்ந்தே செத்துப்போன ஜீவானந்தத்தை நான் சிந்தித்துப் பார்க்கிறேன் ' என பேசியிருக்கிறார்.
2013ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி காமராஜரின் பிறந்தநாளுக்கு, கருணாநிதி எழுதிய பிறந்தநாள் பதிவிலும், தி.மு.கழக அரசு பதவிக்கு வந்த பிறகு கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்கள் ``பெருந்தலைவர் அவர்கள் ஏ.சி. இல்லாமல் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை இப்போது அவருக்குள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி. ஏற்பாடு செய்து கொடுங்கள்'' என்று சொன்னார்கள். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ``அவர்கள் செல்கின்ற எல்லா விருந்தினர் மாளிகைகளிலும் ஏ.சி. வசதி செய்து கொடுங்கள். அவர் அதிகாரத்தில் இல்லையே என்று பார்க்காதீர்கள், நாமெல்லாம் அதிகாரத்திலே வருவதற்கு அவர் வழி விட்டவர், வழி காட்டியவர், எனவே நீங்கள் யாரும் இதில் சுணங்காதீர்கள்'' என்று உத்தரவு பிறப்பித்தேன். " என குறிப்பிட்டுள்ளார். ஆக , அவர் குளிர்சாதன வசதி கொண்ட அறையில் தான் இருந்தார் என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிகிறது.
வரலாறு என்பது பள்ளிப் பாடப் புத்தகங்களைக் கடந்து பல மணி நேரம் படித்துத் தெரிந்துகொள்வது என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.