தமிழ்நாடு

தேக்கடி ஏரிக்கரையில் உலவும் செந்நாய்கள் கூட்டம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

webteam

தேக்கடி ஏரிக்கரையில் உலவிய செந்நாய் கூட்டங்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் தற்போது இரவில் குளிரும், பகலில் கோடையை போன்ற வெயிலுமான காலநிலை நிலவுகிறது. வனங்களுக்குள் வறட்சி உருவாக ஆரம்பித்துள்ளதுள்ளதால் வன விலங்குகள் வெளிவரத்துவங்கியுள்ளன. குறிப்பாக மான்கள், காட்டெருமைகள் மேய்ச்சலுக்காக முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரிக்கரைக்கு வரத்துவங்கியுள்ளன. இதனையடுத்து மான்கள் வரும் புற்கள் நிறைந்த ஏரிக்கரைகளில்,மான்களை வேட்டையாடும் செந்நாய் கூட்டங்களும் முற்றுகையிட்டு வருகின்றன. அந்தவகையில் மான்களை தேடி வந்த செந்நாய் கூட்டம் தேக்கடி ஏரிக்கரையில் உலவியதை கண்டு தேக்கடிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

பொதுவாக செந்நாய் கூட்டம் ஒரு இடத்தில் நிற்காமல் இடம்பெயரும் தன்மை கொண்டது என்றும், அவை நீண்ட நேரம் உலவுவதும் ஒய்வெடுப்ப்பதும் அரிய காட்சிகள் என தேக்கடி பெரியார் காப்பக வனத்துறையினர் தெரிவித்தனர். தேக்கடி ஏரிக்கரையில் நீண்ட நேரம் உலவி ஓய்வெடுக்கும் செந்நாய்களை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிக உற்சாகம் அடைந்ததோடு அவற்றை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.