டிடிவி தினகரன் pt web
தமிழ்நாடு

தவெக தலைமையில் மாபெரும் கூட்டணி? "திமுக கூட்டணியை 3வது இடத்திற்கு தள்ள வாய்ப்பு" - டிடிவி தினகரன்!

தவெக தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால், இண்டியா கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ள வாய்ப்புள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

PT WEB

திருப்பூர் மாவட்ட அமமுக சார்பில், திருப்பூர் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தவெக, அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " தவெக வளர்ந்து வரும் கட்சியாக தெரிகிறது. விஜய்க்கு ஒரு நல்ல வரவேற்பும் உள்ளது. விஜயகாந்த் வருகையைப் போல, விஜய் வருகையும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

விஜய் - டிடிவி தினகரன்

தவெக தலைவர் விஜய் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆதரவை பெற்று வருகிறார். தற்போது, தவெக-வுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தல் நெருக்கும் நேரத்தில் அதை பற்றி அறிவிப்போம். ஆனால், தவெக தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால், இண்டியா கூட்டணியை 3-வது இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், "திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிளவுபட்டு வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசித்து திமுகவை எதிர்த்து வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் முறைகேடு உள்ளது. மேலும், ஓய்வூதிய திட்டம், வேலைவாய்ப்பு என பல வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதில், 90 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. அதனை எதிர்கட்சிகள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன்மூலம், 2026-ல் ஆளும் திமுக அரசு வெளியேற்றப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.