தமிழ்நாடு

கொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்

webteam

தருமபுரியில் கொட்டும் மழையிலும் சாலைப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள பிடனேரி பிரிவு சாலை, மாலை நேரங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்வர். பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள், இரு சக்கர வாகனங்களில் அழைத்து வருவது வழக்கம். ஆட்டோக்களிலும், மாணவர்கள் வந்து செல்வார்கள். இந்த பிடனேரி பிரிவு சாலையில் உள்ள சிக்னலில் போக்குவரத்து பணியினை சுழற்சி முறையில் காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது ஒரு மாத காலத்திற்கு போக்குவரத்து பணி மேற்கொள்ள நியமிக்கப்பட்ட தொப்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், கடந்த சில தினங்களாக பணி செய்து வருகிறார். இன்று தருமபுரி பகுதியில் மாலை 3 மணியிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. 

தொடர்ந்து மழை பெய்த போதும் காவலர் ரவிச்சந்திரன் பணியில் ஈடுபட்டார். முன்னேற்பாடாக வைத்திருந்த ரெயின் கோட் மற்றும் தலைக் கவசத்தினை அணிந்து கொண்டு மழையிலும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியை மேற்கொண்டார். அவரது பணியை கண்டு மக்கள் பாராட்டிவிட்டுச் சென்றனர்.